3 வரவேற்பறை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

“என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து திருக்குர்ஆன் 20:114

அறிமுகம்

கற்கண்டு என்ற இத்தளம் புரோகிராமிங் கலையை (Art of Programming) மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்றுக்கொடுப்பதற்காக கடந்த 26/03/2012 திங்கட்கிழமையன்று துவங்கப்பட்டது. இயல்பாக சிந்தித்து புரோகிராம் எழுதுவது எப்படி என்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் இங்கே தரப்படுகின்றன. புரோகிராமராக வரவேண்டும் என்று விரும்புவர்கள் இந்த பயிற்சிகளை படித்து புரிந்து கொண்டால் அவர்களால் இயல்பாக லாஜிக்கை உருவாக்கவும் இயல்பாக புரோகிராம் எழுதவும் முடியும்.

கற்கண்டு - பெயர்க்காரணம்

கற்கண்டு என்பது இனிக்கும் பொருள். இனிக்கும் பொருளை அனைவரும் விரும்புவதென்பது இயல்பு. Programming என்கிற கலையை கசப்பான ஒன்றாக பார்க்கும் ஒவ்வொருவரும் இதில் உள்ள எளிமையான பாடங்களை படித்தால் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள், கற்கண்டை விரும்புவதுபோல் இக்கலையையும் விரும்புவார்கள் என்று நான் கருதியதால் இத்தலைப்பை வைத்துள்ளேன்.

நோக்கம்

ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கும். நான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் நியாயத்தீர்ப்பு நாளை நம்புகிறேன். நியாயத்தீர்ப்பு நாள் என்றால் இந்த உலகம் ஒருநாள் அழிக்கப்பட்டு, இவ்வுலகில் வாழ்ந்த அனைவரும் இறைவனால் ஒருநாள் திரும்ப எழுப்பப்பட்டு அவரவர் செய்த நல்லது கெட்டதுகள் எடைபோடப்பட்டு அதற்குத்தக்க கூலி கிடைக்கும் நாளாகும். நம்முடைய நல்ல செயல்களின் எடை அதிகமாக இருந்தால் நமக்கு சுவர்க்கம் கிடைக்கும், கெட்ட செயல்களின் எடை அதிகமாக இருந்தால் நமக்கு நரகம் கிடைக்கும். நல்ல செயல்களை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசித்த போது "பயனுள்ள கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுக்கவேண்டும்" என்ற எண்ணம் தோன்றியது.

மனிதன் மரணித்து விட்டால் அவனால் எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவோம். ஆயினும் நிலைத்து நிற்கும் வகையில் நாம் ஒரு நல்லறத்தைச் செய்துவிட்டு மரணித்தால் அந்த நல்லறத்தின் மூலம் மக்கள் பயனடையும் காலம் வரை நமக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.

நிலைத்து நிற்கும் தர்மம் என்றால் என்ன?

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 3084

இந்த நபிமொழிக்கேற்ப நான் பெற்ற பயனுள்ள கல்வியை அடுத்தவருக்கு கொடுத்து செல்வதால் அவர்கள் பயன்பெறுவார்கள், அவர்களிடமிருந்து அதற்கு பின்வருபவர்கள் பயன்பெறுவார்கள் இப்படி மக்கள் பயன்பெறும் காலமெல்லாம் எனக்கும் நன்மை வந்து சேரும் அல்லவா? அதற்காகக்தான் எழுதுகிறேன். சமுதாயத்திற்கு நன்மை தரும் பயனுள்ள கல்வியை தருவது என்ற நோக்கில் எனது பயணத்தை துவங்குகிறேன்.

இறைவா! பயனற்ற கல்வியை விட்டும் அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும் நிறைவடையாத ஆத்மாவை விட்டும் அங்கீகரிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 4899.

யாருக்காக எழுதுகிறேன்?

நிறைய மாணவர்கள் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளை வெற்றிகரமாக படித்து நல்ல வேலையில் சேர்ந்து வாழ்வில் வெற்றிபெறவேணடும் என்ற கனவில் பள்ளியிலும், கல்லூரியிலும், கம்ப்யூட்டர் செண்டரிலும் நிறையவே மெனக்கெடுகிறார்கள். நிறைய காசு கொடுத்து படிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அவ்வாறு முயற்சி செய்யும் அனைவராலும் வாழ்வில் வெற்றிபெற முடிவதில்லை. அவர்களுக்கு எவ்வாறு புரிய வைக்க வேண்டுமோ அந்த முறையில் நிறைய பேர் சொல்லித்தருவதில்லை என்பன போன்ற காரணங்கள் நிறைய இருக்கலாம். இதனால் பாதிக்கப்படுவது அந்த மாணவர்கள் தான். அதிலும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து, தங்கள் குடும்பத்தில் எந்த ஒரு கம்ப்யூட்டர் படித்தவர்களின் பின்னணியும் இல்லாது வரும் மாணவர்கள் படும்பாடு சொல்லவே தேவையில்லை.

இவர்கள் தேர்வுக்கு படிக்கும்போது என்னென்ன புரோகிராம்கள் கேட்கப்படும் எனற ஒரு லிஸ்டை வைத்துக்கொண்டு அதை மனப்பாடம் செய்து அதை அப்படியே எழுதுவார்கள். தேர்வில் அவ்வாறு எழுதும்போது ஏதாவது ஒரு வரியை மறந்துவிட்டாலோ அல்லது error வந்துவிட்டாலோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக முழித்து கொண்டிருப்பார்கள். இறுதியில் மார்க் வாங்காமல் கோட்டை விட்டுவிடுவார்கள். அடுத்து வேலை தேடுவது இண்டர்வியு அட்டண்டு செய்வது போன்றவை இவர்களுக்கு கடினமானதாக இருக்கும்.

ஆனால் சில மாணவர்கள் இருப்பார்கள் அவர்கள் எதையும் மனப்பாடம் செய்யமாட்டார்கள்.  தேர்வில் எந்த கேள்வி வந்திருந்தாலும் சிரமமில்லாமல் எழுதி நிறைய மார்க் எடுத்துவிடுவார்கள். இவர்களால் மட்டும் எப்படி அவ்வாறு வெற்றிபெற முடிகிறது? மற்றவர்களிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன இவர்களிடம் இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும், அனைத்து மாணவர்களும் புரோகிராமிங் செய்வதில் வெற்றிபெற தேவையான ஆலோசனைகளை வழங்கிடவும் இதை எழுதுகின்றேன்.

புரோகிராம் எழுத ஆர்வம் இருக்கிறது ஆனால் எப்படி எழுதுவது எங்கிருந்து ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை என்று சொல்பவர்களுக்காகவும் இதை எழுதுகின்றேன். இத்தளத்தின் மூலம் அவர்களின் தேடுதல்களுக்கான சரியான தகவல்களை என்னால் இயன்றவரை கொடுக்க முயற்சிக்கிறேன்.  

என்னென்ன எழுதப்போகிறேன்?

புரோகிராம் என்றால் என்ன?
லாஜிக்காக எப்படி யோசிப்பது?
சிறிய மற்றும் பெரிய புரோகிராமை எப்படி டிஸைன் செய்வது?
எப்படி புரோகிராம் எழுதுவது?
எழுதிய புரோகிராமை எவ்வாறு டெஸ்ட் செய்வது?
டேட்டா பேஸ், டேபிள்களை எப்படி டிஸைன் செய்வது?

உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைகளை மிகவும் எளிய நடையில் நிறைய உதாரணங்களோடு இந்த வலைப்பூவில் எழுதவிருக்கிறேன்.

நீங்கள் செய்யவேண்டியது என்ன?

பாடங்கள் சம்பந்தப்பட்ட உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதியுமாறும்; இத்தளம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அவர்களுக்கும் இத்தளத்தை அறிமுகப்படுத்தி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஜ.முஹம்மது ரியாதுல் ஃபரீத்.
22-05-20123 comments:

 1. கணினித்துறை மாணவர்களுக்கான வரப்பிரசாதமாக இவ்வலைப்பூவை அமைந்துள்ளதற்கு மிக்க நன்றி.

  பார்த்தவுடனேயே உங்கள் தளம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இதுவரை எழுதிய அத்தனை பதிவுகளும் நிரலாக்கக் கலையைப் (art of programming) பற்றியே இருப்பது கூடுதல் சிறப்பு.

  ஒரு வேண்டுகோள். தொழில்நுட்ப பதிவுகளை (குறிப்பாக புரொகிராமிங் குறித்து) இவ்வலைப்பூவில் தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டுமென்பதே என் போன்றோரின் அவா. பயனுள்ள இத்தளத்திற்கு எனது வலைப்பூவில் முதல் வேலையாக தொடுப்பு வழங்கியுள்ளேன்.

  ReplyDelete
 2. சகோ. ராஜ்குமார் அவர்களுக்கு
  முதலில் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இணைப்பு கொடுத்தமைக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  எனது நோக்கமே புரோகிராமிங் என்ற கலையை மாணவர்களுக்கு எளிய முறையில் புரியவைக்கவேண்டும் என்பதுதான். அந்த வகையில் நான் சரியான திசையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை தங்களது கருத்தை படித்ததும் புரிகிறது.

  தொடர்ந்து பதிவுகளை படித்து தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 3. It may useful to you brother!

  http://www.google.com/events/gadc2012/

  ReplyDelete